COPYRIGHT NOTICE!

உங்களைப் போல் தான் நானும். என் தேடல்களில் பதிந்த‌ காலடித்தடங்கள் இவை. எனவே, இந்த பதிவில் காணப்படும் எதையும் என் அனுமதியோடு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

Wednesday, February 25, 2009

பதிவுக்கு பின்னூட்டம் வரலைன்னா என் நிலை இது தான்! (பீடில்ஸ்)

பீடில்ஸ் பாடல் காணொலி:


தமிழாக்கம்:

நான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.
நான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.

எலினார் ரிக்பி
அவள் திருமணம் (என்றோ) நடந்த தேவாலயத்தில்
விழுந்து கிடக்கும் அரிசியைப் பொறுக்குகிறாள்...
ஏதோ ஒரு கனவில் அவள் வாழ்கிறாள்,
சன்னலோரம் காத்துக்கொண்டு!
கதவருகில் ஒரு குப்பியில் கிடக்கும் முகத்தை அவள் அணிவது வழக்கம்....
யாருக்காக?


இவ்வளவு தனியர்கள்! எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள்?
இவ்வளவு தனியர்கள்! எங்கே இவர்களின் வாழ்விடம்?

நான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.
நான் எல்லா தனியரையும் பார்க்கிறேன்.

மறைத்தந்தை மக்கென்ஸி
தம் அருளுரையின் வார்த்தைகளைக் கோர்க்கிறார்;
யாருமே கேட்கப் போவதில்லை...
யாரும் அருகிலும் வருவதில்லை!
அவர் பணிபுரிவதைப் பாருங்கள்:
யாரும் இல்லாத இரவில் அவர் காலுறைகளிடம் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்?
அவருக்கு என்ன போச்சு?


இவ்வளவு தனியர்கள்! எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள்?
இவ்வளவு தனியர்கள்! எங்கே இவர்களின் வாழ்விடம்?

எலினார் ரிக்பி
தேவாலயத்திலேயே மரித்தாள்,
தனியளாய் அவள் பெயருடன் மட்டும் புதைக்கப்பட்டாள்.
யாருமே வரவில்லை.
மறைத்தந்தை மக்கென்ஸி
தம் கைகளில் இருந்த மண்ணைத் துடைத்தவாறே அவளுடைய கல்லறையிலிருந்து நடக்கிறார்...
யாருமே காப்பாற்றப்படவில்லை!


இவ்வளவு தனியர்கள்! எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள்?
இவ்வளவு தனியர்கள்! எங்கே இவர்களின் வாழ்விடம்?

கெ.பி.யின் பின்னூசி குறிப்பு: கவுஜ போட்டா மக்கள் காணாம போயிடறாங்களே, என்ன ஆவுதுன்னு பாக்கலாம்னு தான். மக்கென்ஸியாகவும், எலினார் ரிக்பியாகவும் நானேதான்! Scheduled post.

Sunday, February 22, 2009

புரியாத பெண்கள் - 2

முன் குறிப்பு: இதே பெயர்/ஊர்/தொழில் விவரங்களோடு யாரேனும் அமைந்திருந்தால் அது கட்டாயம் தற்செயலே. தெரியப்படுத்தினால் விவரங்களைக் கட்டாயம் மாற்றி விடுகிறேன். யாரையும் காயப்படுத்துவது என் நோக்கம் அல்ல. ஆனாலும் என் கேள்வி இது தான்: போராளி குணங்கள் எங்கே போயின இந்த பெண்களுக்கு? உயர் கல்வியோ இந்தியச் சமூக வாழ்வியலோ இந்த பெண்களுக்குச் சொல்லித் தந்ததும் சொல்லித் தராததும் என்ன?
[முந்தைய பதிவு: புரியாத பெண்கள் - 1]

ஹைமாவை எனக்கு ஓரிரண்டு மாதங்களாகத் தெரியும். அமைதியான, அன்பான மருத்துவர் என்று அவருக்கு நல்ல பெயர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். கான்சஸின் ஒரு மூலையில் நாங்கள் விரும்பிச் செல்லும் கோயிலுக்கு அவரும் வருவார். அமைதியாய் வேண்டிச் செல்வார். அவருக்கு ஒரே பெண். என் குழந்தைக்கும் அவர் பெண்ணுக்கும் ஒரே வயது. நாங்கள் கோயிலுக்குள் வேண்டும் போது குழந்தைகள் வாயிற்பக்கம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஓரிரு முறை வெளியே விளையாடப் போன குழந்தைகளைப் பிடிக்கப் போன போது எனக்கு ஹைமா பழக்கமானார். ஹைமா தமிழ்ப் பெண்; ஒரிஸ்ஸாவிலேயே வளர்ந்தாலும், நன்றாகத் தமிழ் பேசுவார்.

இரண்டு முறை என்னையும் ராஜாமணியையும் அவர் வீட்டிற்கு அழைத்து உணவருந்தச் சொல்லியிருக்கிறார். முதல் முறை சென்ற போது அவருடன் கட்டாக்கில் கூடப் படித்த இருவர், இருவரும் அவர்தம் கணவர்களுடன் (கணவர்களும் மருத்துவர்கள்) வந்திருந்தனர் - அவர்கள் பேச்சிலிருந்து ஹைமா திருமணமாகி இது தான் முதல் முறை அவர்களை வீட்டுக்கு அழைத்திருக்கிறார் என்று தெரிந்தது. (ஹைமாவின் குழந்தைக்கு ஐந்து வயதாகியிருந்தது...!?) வந்தவர்களில் ஒரு தம்பதி செயிண்ட் லூயிஸிலிருந்தும் மற்ற தம்பதி அயோவாவிலிருந்தும் வண்டி ஓட்டி வந்திருந்தார்கள். மருத்துவம் பற்றி ஒன்றும் தெரியாத எனக்கும் ராஜாமணிக்கும் கூட கம்பெனி கொடுத்தது ஹைமாவின் கணவர் பாலா. பாலாவின் அளப்பறைகளிலிருந்து அவர் பல உள்ளூர் கம்பெனிகளில் பல வருடங்களாக ’பிரமாதமான சேல்ஸ் வேலை’ செய்பவர், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர், அவர் ஈட்டிய பெரும் செல்வத்திலிருந்து(!) இந்த 4லட்ச டாலர் மதிப்புள்ள வீட்டை வாங்கியிருக்கிறார் என்பதெல்லாம் தெரிய வந்தது. ஹைமாவின் தீர்க்கம் பாலாவிடம் மிஸ்ஸிங்.

பேச்சு சுவாரஸ்யத்தில், மற்ற மருத்துவர்களெல்லாம் தீவிரமாக, கல்லூரி, வேலை பற்றி பேசத் தொடங்கிவிட்டதை கவனித்தேன். பாலா, ‘ஒரு நிமிஷம் இருங்க, இதோ வரேன்’ என்றார். சுற்றிக் கொண்டு கொல்லைப் பக்கம் பின்னால் சென்று மஞ்சள் இலை வார்த்த காட்டன்வுட் மரங்களுக்குப் பின்னால் மறைந்தார். நான் கையில் இருந்த கப்பிலிருந்து ஜூஸை குடிப்பது போல் அவர் என்ன செய்கிறார் என்று கவனித்தேன். மரங்கள் ஓரிரண்டின் பின்னால் நின்று கவனித்தவர், எங்கள் பக்கம் திரும்பினார். (வம்பு என் ரத்தத்தில் ஊறியதாக்கும்!) யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்தவர், குனிந்து ஒரு மது பாட்டிலை எடுத்து ரசித்துக் குடித்தார்.

நான் அவர் முழு பாட்டிலையும் குடித்து முடிக்கிறார் என்று கவனித்து, அதிர்ந்து, ராஜாமணிக்குக் கண்ணைக் காட்டினேன் (எங்கே அதெல்லாம் புரியப் போகிறது, வீட்டுக்கு வந்து ‘நான் கண்ணை கண்ணைக் காட்டினேன், நீ என்ன பண்ணிட்டு இருந்தே’, ‘தூக்கமா வந்தது, உனக்கும் தூக்கம்னு நினைச்சேன்’ எல்லாம் ஆச்சு!). இந்த ஊர் பார்ட்டிகளில் பாட்டில் இருப்பது ஒன்றும் தீங்கு இல்லை. ஆனால், ஏன் மறைத்துக் குடிக்க வேண்டும்? (வந்திருப்பவர்கள் பங்கு கேட்கப் போகிறார்கள் என்றா:-) திரும்பி வந்த பாலா அதி வேகமாகப் பேசவும் உளறவும் தொடங்கினார். பார்ட்டி வெகு விரைவில் முடிந்தது.

பார்ட்டி முடிந்து, ஓரிரு மாதங்கள் கழித்து மீண்டும் கோவிலில் சந்திப்பு. இந்த முறை என் தோழி மீராவுடன் ஹைமா பேசிக் கொண்டிருந்தார். இரண்டு பேருமே டாக்டர்கள் என்பதால், அவர்களிருவரும் தோழிகளும் கூடவாம்! மீராவின் கணவரும் என் கணவரும் ஒரே அலுவலகம் என்றதும் ஹைமா ‘ஹேய், எல்லாம் நெருங்கிட்டோம்ல!’ என்று உண்மையான மகிழ்ச்சியோடேயே கேட்டார். மீராவோடு அன்று மாலையே தொலைபேசினேன். ஏழைக் குடும்பத்தில் பிறந்து படித்து அமெரிக்கா வந்த பாலாவுக்கு இது மூன்றாவது திருமணம்; முதல் இருவரும் வெள்ளைக்காரப் பெண்கள், இருவருமே பாலாவின் குடிப் பழக்கத்தைக் காரணம் காட்டி விவாகரத்துப் பெற்றார்கள்; ஹைமாவின் தந்தை இளைய வயதில் அவர்கள் குடும்பத்தை விட்டுப் போய் வேறு குடும்பம் அமைத்துக் கொண்டார்; அரசாங்க / தாய்மாமாவின் உதவிப் பணத்தில் மருத்துவம் படித்த ஹைமாவுக்கு இந்த வரன் கல்யாணத் தரகர் மூலம் வந்தது - ஹைமா ஒப்புக் கொண்டதற்கு முக்கியக் காரணம் பாலா குடும்பத்தினர் சொன்ன அமெரிக்கக் குடியுரிமை.

என் தோழி மீராவுக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். ‘சுமா, தப்பா நினைக்காதே. ஹைமா எதுக்குக் கோயில் வந்தான்னு தெரியுமா?’

நான் - ‘அவ மாமியார் ஊர்ல இருந்து வந்திருக்காங்கன்னு சொன்னாங்க’ என்றேன்.

மீரா - ‘ப்ரெக்னண்ட்னு சொன்னா. 6 வாரமாவுதாம். அதுக்குத் தான் அவ மாமியார் ஊர்ல இருந்து வந்திருக்காங்க... அனேகமா நம்ம இரண்டு குடும்பத்தையுமே சாப்பிடக் கூப்பிடணும்னு சொன்னா....’. எனக்கு பாலா குடிப்பதை, இப்படி பெண்டாட்டியை தன் செயல்களால் வதைப்பதை அவர்கள் வீட்டுக்குப் போய்ப் பார்க்க வேண்டுமா என்று இருந்தது.

ஆனால் என்னவோ ஹைமா எங்களைக் கூப்பிட்டது ஆறு மாதங்கள் கழித்து. அதுவரை பணி மும்முரம், அது இது:-) என்று நானும் ஹைமாவிடம் பேசவில்லை. வீட்டுக்குப் போனால், ஹைமாவின் வயறு மேடிட்டிருக்கவில்லை. என்னைப் பார்த்ததும் அவள், ‘வாவ், கங்க்ராசுலேஷன்ஸ், எத்தனை மாசம்’ என்றாள். ‘ஹாய் ஹைமா, உனக்குக் கம்பெனி கொடுக்கலாம்னு நினைச்சேன், அஞ்சு மாசம்! உனக்கு என்ன ஆச்சுப்பா?’ என்றேன்.

என்னைக் கூர்ந்து பார்த்து விட்டு ‘அபார்ஷன் ஆயிடுச்சும்மா. நீ நல்ல செய்தி கொடுக்கும் இந்த வேளைல அது பத்திப் பேச வேண்டாம், வா, வந்து உள்ளே உட்காரு’ என்று கூப்பிட்டாள். பாலா, ராஜாமணியையும் மீராவின் கணவரையும் அழைத்துப் போய் ஆஃபீஸ் அறையில் உள்ளே பேசிக் கொண்டிருந்தார். ‘இன்டர்நெட் ரெவல்யூஷன் சார்! க்ளிக் மார்க்கெட்டிங்னு இது நான் ஒரு க்ளோபல் மார்க்கெட்டிங் கம்பெனில, வீட்டிலர்ந்தே வொர்க் செஞ்சிட்டிருக்கேன்! ஹைமாவுக்குத் தான் கம்ப்யூட்டர் பத்தி ஒண்ணும் தெரியல... எனக்கு அந்த வேலை போனதும் ஒரே கவலைப் பட்டா. நான் கூட சொன்னேன், ஒன் ஃப்ரண்ட்ஸை எல்லாம் கூப்பிடு, அவங்களே இது எப்படியாப்பட்ட வேலைன்னு கன்ஃபர்ம் செய்வாங்கன்னு! சொல்லுங்க’. இந்த பார்ட்டியும் விரைவிலேயே முடிந்தது - இந்த முறை மீராவின் கணவரும் என் கணவரும் அங்கிருந்து ஓடப் பார்த்தார்கள்.

கிளம்பும் முன்னர் ஹைமாவின் மாமியார் ‘குங்குமம் எடுத்துக்கோ’ என்றபடியே, மெல்லிய குரலில் ‘பாவம் ஹைமா, அவ திருப்பியும் கர்ப்பமா இருக்கான்னதும் அடுத்ததாவது ஆண்குழந்தையா இருக்கட்டும்னு நான் ரொம்ப சொன்னேன்! பும்சுவனம்லாம் கூட கோயில்ல இருந்து ஆள் கூப்பிட்டு செஞ்சுகிட்டா, அப்படியும் அது பொண்ணாயிருந்தது.... உனக்கு என்ன குழந்தைன்னு தெரியுமோ?’ என்றார். ‘ம், பொண்ணு தான். பாரதின்னு பேர் வைக்கப் போறேன்’.

Monday, February 16, 2009

புத்தக விமர்சனம்: The Palace Of Illusions - சித்ரா பானர்ஜி திவாகருனி

புத்தக விமர்சனம்: “The Palace Of Illusions” - சித்ரா பானர்ஜி திவாகருனி எழுதியது. இந்த புத்தகத்தை 2008இலேயே படித்து முடித்திருந்தாலும், நேரமின்மை காரணமாகவும், இதை அசை போட்டுப் பார்த்து அப்புறம் எழுதணும்னு தோன்றியதாலும் இப்பதான் விமர்சனம். எழுத்தாளர் சித்ரா இந்தியாவில் பிறந்த இன்றைய-அமெரிக்கவாசி. அவருடைய இணைய தளத்தில் இந்த புத்தகத்தைப் பற்றி மேலும் காண்க.

கதை ‘மஹாபாரதம்’ கதை தான். ஆனால், பாஞ்சாலியின் பார்வையில். இந்த புத்தகப்படி பார்த்தால், அந்த கதையே அவளுக்காக, அவளால், அவளைப் பற்றி என்பது போல! துருபத ராஜனின் சபதம் முடிக்கப் பிறந்தவள் அவள். அந்த சபத வலையில் வளர்பவளுக்கு, பிறந்த வீட்டு அரண்மனை அந்நியமாகவே படுகிறது. அர்ஜுனனை மணம் முடிக்கவே வளர்க்கப் படுகிறவள், மஹாபாரத கதையில் வெளிப்படையாய்க் காட்டப்படாத ஒரு திருப்பமாய் அவள் இன்னொரு குந்திமகனுடன் காதல்வயப்படுகிறாள்னு கதை போகுது. ஐவரையும் ஏன் மணக்கிறாள், அவள் மகாராணியாய் அனுபவிச்சு வாழ்ந்த ஒரே மாளிகை மாய மாளிகை, அதுக்கு என்ன ஆவுது, இறுதி வரை அவளுக்குன்னு ஒரு இடம் இல்லாத அலைக்கழிக்கப் படுவது, இந்த பகுதிகளெல்லாம் விறுவிறுன்னு போகுது. எழுத்தாளர், திரௌபதியை முடிந்த அளவு பெண்ணியப் பார்வையிலே சித்தரிக்கிறார்ங்கறதால படிக்க நல்லா இருந்தது.

உங்களுக்கு மஹாபாரதக் கதை நல்லா தெரிந்திருந்தாலோ, அல்லது தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தாலோ, கட்டாயம் இதைப் படிங்க. மஹாபாரதக் கதை எல்லாருக்கும் தெரியும் என்பதால், கதைபாத்திரங்களிலோ, குருக்‌ஷேத்திர போரில் வெற்றி வேற யாருக்கோ அப்படின்னோ மாத்திட முடியாது. ஆனால், திரௌபதிக்கு கிருஷ்ணர் உற்ற பால்ய நண்பராக இருக்கிறார். கதையோட அடிப்படை ஓடையோட போகும்போது, திடீர்னு ஒரு மந்திரக் கிழவி வந்து திரௌபதிக்கு வருங்காலத்தில அவள் படக்கூடிய துன்பங்களைத் தாங்குவதற்கான மந்திரத் தந்திரங்கள் சொல்லிக்குடுக்கறாங்க; வியாசர் அவங்களுக்கு உதவி செய்யப் பாக்குறார்.

செல்லப் பொண்ணான பாஞ்சாலியின் கோபம் பிரசித்தின்னுவாங்க. ஐவரை மணமுடித்ததால் கேலிக்குள்ளாகும் தன்னிலை ஒருநாளும் அவளுக்கு மறப்பதில்லை. இதில ஐவரை மணந்தாலும், ஒவ்வொரு வருடமும் ஒருவருக்கு மனைவியாய், கன்னியாக ஆகும் வரம் வேறு:-( தன் மேல உண்மையாய் காதல் கொள்ளும் பீமனை தன் உண்மை உணர்வுகளைக் காட்டாமல் எப்படி நடத்துகிறாள்னு நல்லாக் காட்டுகிறார் (பெண்) எழுத்தாளர்;-) மற்றவர் கைகளில் தன்னூழ் இருக்கேன்னு Angry Young Woman ஆகவே காலம் கழிக்கிறாள் பாஞ்சாலி. கதையில் ரொம்ப மாற்றம் முடியாதுன்னாலும், பெண்ணியம் தெறிக்கிறது.

முதலில் கதை எனக்கு சுவையாகப் படவில்லை; தொடக்கத்தில் ஓரிரண்டு இடங்களில் கதைத் தொடர்ச்சி சொதப்புது; மஹாபாரதக் கதைப் படியே குந்தி லேசுப்பட்டவங்க இல்ல! திரௌபதியின் கோபத்தில், அவள் அவசரக் குடுக்கைத்தனத்தில் மட்டும் விளைந்ததல்ல பாரதம். குந்தியினாலும்!!! குந்தி, சிறுபருவத்தில் தனக்குக் கர்ணன் பிறந்ததைச் சொல்லாமல் மறைக்கிறாங்க. அதோட, அவங்க கணவனுக்கு இரண்டாவது மனைவி மாத்ரி மேல தான் குந்தியைவிட விருப்பம் அதிகம்! குந்தி, தன் கணவனுக்குக் குழந்தை பிறக்காதுன்னதும் கூலா மூன்று குழந்தைகள் ‘வரமா வாங்கிக்கிறாங்க’. அர்ஜுனன் போட்டியில் திரௌபதியை வென்று வந்த போது, அதை அறியாமல் (?) குந்தி ‘நீங்க அஞ்சு பேரும் உங்க பரிசைப் பகிர்ந்துக்கணும்’னு சொன்னாலும், ‘அச்சோ, தெரியாம சொல்லிட்டேன், அடிச்சு கிள்ளி அதுமேல துப்பினா நான் சொன்னதை மாத்தின மாதிரி ஆயிடும்’ அப்படின்னு சொல்லியிருக்கலாம்; கதையில அப்பப்ப எண்ட்ரி கொடுக்கிற கிருஷ்ணர் இப்பவும் டகால்டி வேலை செய்திருக்கலாம். ஆனால், குந்தி ‘அஞ்சுபேரும் இணைஞ்சு இருக்கணும்; ஆளுக்கு ஒரு மனைவியை திருமணம் செய்தா வெவ்வேறு வழி போயிடுவாங்க, அதுக்குள்ள இப்படி பூட்டி வைக்கணுமி’ன்னு செய்த குறுக்குவேலை அது (என்பது என் தாழ்மையான கருத்து). அவங்களுக்கு இன்னும் இந்த கதையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். எது சொன்னாலும், கதையின் கடைசி இரண்டு பக்கங்கள் எனக்குப் பிடிக்கவேயில்லை - எழுத்தாளரின் கற்பனை முடிவு மட்டும் கதை ஓட்டத்துக்கும் பெண்ணியத்துக்கும் ஒவ்வாத கொடுமை.

மத்தபடி வித்தியாசமா, விறுவிறுன்னு இருந்தது. நீங்களும் கட்டாயம் படிங்க. உங்களுக்குப் பிடிச்சது/பிடிக்காதது எதுன்னு சொல்லுங்க!

Saturday, February 14, 2009

புரியாத பெண்கள் - 1

பாயல் மும்பையில் வளர்ந்த தமிழ்ப்பெண். அழகாய் அளவாய் இருப்பாள்; ஏற்ற உடைகள் அணிவாள்; அளந்து பேசுவாள். மறத்தமிழச்சியான எனக்கு, ‘தமிழ் உனக்குத் தாய்மொழின்னா, ஏன் பாய் கடை பாயான்னு பேரு வச்சிருக்காங்க உங்க அப்பா அம்மா?’ன்னு கூட கேக்க எனக்கு ஆசை தான். அவளை என் உயிர்த்தோழின்னு சொல்ல முடியாது - நான் பேசறதை கேட்டு சிரிச்சிட்டே இருக்கும் ஓரிருவர் தான் எனக்கு உயிர்த்தோழிகள்; பாயல் என் அருமைத் தோழிங்க மாலாவோ கீதாவோ மாதிரி இல்லை. (அவங்களைப் பத்தி இன்னொரு நாள் கட்டாயம் எழுதறேன்).

பாயல் ஒரு அமெரிக்க-நதிக்கரையோரம் ஒரு விழாவில தன் மகன், தன் பெற்றோரோட வந்திருந்தாங்க. அவங்க மகனும் என் மகனும் ஒரே வயது, நான் ஊருக்குப் புதிது, என் இரண்டாவது குழந்தைப்பேற்றுக்காக என்னைப் “பாத்துக்க” வந்த என் பெற்றோருக்கு அவங்க பெற்றோர் நண்பர்களாகலாமேனு பல காரணங்களால;-) நானா போய் பாயல் கூட பேசினேன். ஒரு புருவ உயர்த்தலோட அந்த காரணங்களைக் கேட்டுகிட்டு, உடனடியா ஒரு விஷயம் சொன்னாங்க - “நான் என் கணவரை விட்டு தனியாய் வாழறேன். விவாகரத்து கோர்ட்ல நடந்திட்டிருக்கு”னு. ஹலோ சொன்னவுடனே, எனக்கு முதுகுவலின்னு யாராவது சொல்வாங்களா என்ன! இன்னும் அவங்க சொன்னது - பாயலின் கணவன் அசோக் இந்தியாவுக்குத் திரும்பி விட்டான்; அடிக்கடி வந்து பாயலுக்கு ஆதரவு கொடுக்கின்றார்கள் பெற்றோர். அந்த சிறுவன் விக்ரம் என் கணவர் ராஜாமணியிடம் ஒட்டிக் கொண்டுவிட்டான்.

பாயல் சொன்ன விவரங்களிலிருந்து நான் புரிந்து கொண்டது: அமெரிக்காவில் பி.ஹெச்.டி. படித்த பெண்; ஒரு பெரும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்; சிலரின் விதியை, பலரின் நோயற்ற வாழ்வை உறுதி செய்யக்கூடிய உயர் ஆராய்ச்சியாளர். பெற்றோர் சொல்படி இங்கேயே பி.ஹெச்.டி. படித்த இந்திய ஒருவனை மணந்து, அவன் இவளைப் போல் திறமைசாலியாக இல்லாத காரணத்தால் அவன் கொடுத்த அத்தனை தொல்லைகளையும் பொறுத்துக் கொண்டிருந்தாள். விவாகரத்து வேணும்னு கேட்டு அவன் அவளிடம் சொன்ன காரணம் - கடல்கடந்து யோகா மூலம் நிம்மதியை விலைகூவி விற்ற ஒரு ‘ஞானி’யிடம் மாணவனானதாலாம்!

இன்னொன்று எனக்குப் புரிந்தது - லேட்டா! அப்பா,அம்மா சொன்ன பையனைப் பார்த்து பொய்யாய் வெட்கப்பட்டு, ‘பெண்பார்க்கும் படலத்தில் எல்லார் முன்னிலையில் அவனிடம் தைரியமா கேள்வி கேட்டேன்’னு தோழிகள்ட சொல்லி, பெண்பார்க்கப்பட்ட இரண்டாம் நாள் ‘அந்த பரிட்சையில்’ பாஸ் செய்துட்டு, மூன்றாம் நாள் கல்யாண ஷாப்பிங், நான்காம் நாள் ரிசப்ஷன், அஞ்சாம் நாள் கல்யாணம்னு நிறைய பெண்கள் அமெரிக்கா வந்துடறாங்க. மக்டனல்ட்ஸ்ல ‘ட்ரைவ் பை’ சாப்பாடு ஆர்டர் கொடுத்தவுடனே, சாப்பாடு வாங்கிட்டும் போகலாம் (கல்யாணம், விவாகரத்து கூட லாஸ் வேகஸ்-இல் ட்ரைவ் பை செய்யலாம்). இந்த ட்ரைவ் பை கலாசாரத்தில் வந்த பெண்களும் சரி, பெற்றோர்கிட்ட நல்ல பேர்வாங்க இப்படி கல்யாணம் செய்யும் பசங்களும் சரி, பொதுவா தனித்து வாழும் (மணமான / மணமாகாத) இந்தியப் பெண்களிடம் சரியாகப் பேசுவதில்லை!

பின்னர், அந்த ஊரில் எனக்கு அறிய வந்த பல இந்தியப் பெண்கள் பாயலிடமிருந்து விலகியே இருந்தார்கள். எங்க வீட்டு கொலுவுக்கு வந்த அஞ்சு, சித்ரா எல்லாருமே பாயல் கூட பேசலை. பாயல் என்னிடம் “சுமா, உன் பிள்ளை பிறந்தநாளுக்கு எத்தனை பேரை கூப்பிட்டே! என்பிள்ளை விக்ரம் பிறந்தநாளுக்கு ஃப்ரண்ட்ஸ் 2 பேர், உன் பிள்ளைன்னு மொத்தமே மூணுபேர் தான்...” என்று வருந்தினாள். “ஏன்? சிதாரா, ஷீபா பிள்ளைகளையும் கூப்பிடேன்!” என்றேன். “அசோக் அவங்களையெல்லாம் கூப்பிட வேண்டாம்னுட்டாரு... அவங்க ஹிந்து இல்லியே! நீ இங்க வந்தும் விடாது நம்மூர்முறையை பின்பற்றுகிறாய்னு அவருக்கு உன்மேல மரியாதை”. எனக்கு இது சாதி அபிமானம் என்று தான் தோன்றியது.

“அசோக் இங்க வந்திட்டாரா என்ன!?”

“இல்லை, கோர்ட் ரூலிங் படி இதுக்கெல்லாம் அவரிட்ட கேட்கணும்னு இல்லை. ஆனால் தந்தைங்கற முறையில் அவர் எல்லாத்திலியும் இன்வால்வ்ட் ஆக இருக்கணும் இல்லியா!”

இதற்குப் பின், என்னால் முடிந்த வரை நான் பாயலிடம் பேசுவதைத் தவிர்த்தேன். அவளுக்குச் சில கட்டாயங்கள் இருந்தன போலும். என் தாய் ஃபோனில் முதலில் கேட்டுக் கொண்டிருந்தார், “பாயல் எப்படியிருக்காள்? விக்ரம் எப்படியிருக்கான்? பாயல் அவ புருஷன் பத்தி ஏதாவது சொன்னாளா” என்றெல்லாம்... என் குழந்தைக்கு ‘பாரதி’ன்னு பேர் வைக்கிற கேரக்டர் நான், எப்படி பாயல் மாதிரி பெண்ணெல்லாம் பொறுத்துப்பேன்?

போனவாரம் பாயல் கிட்ட இருந்து ஒரு செயின் இமெயில் வந்திருந்தது: ‘இந்த இமெயிலை ஏழுபேருக்கு ஃபார்வர்டு செய்தால், பிள்ளையார் உன் மனதிற்கு இஷ்டமானதை கொடுப்பார்; அப்படிச் செய்யாவிடில், இல்லாத கொடுமையெல்லாம் நடக்கும்’னு. “பாயல், இனி இப்படிப்பட்ட இமெயிலை எனக்கு அனுப்பினால், எனக்கு வரும் மற்ற செயின் இமெயில்களை உனக்கு அனுப்புவேன்”னு ஒரு மெயில் தட்டி விட்டேன். “ஸாரி, எனக்கு இப்ப இருக்கும் மனக்கஷ்டத்தில, இப்படியாவது எனக்கு நல்லது நடக்குமான்னு செஞ்சுட்டேன். அப்புறம் சொல்றேன்”, என்று ஒருவரி மட்டும் ஒரு பதில் அனுப்பினாள். என்ன மனக்கஷ்டமோ, எனக்குத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை.

இந்த கதையை இன்னிக்கு எழுதுவதற்குக் காரணம், பாயலின் இன்னொரு இமெயில்: இரண்டு நாட்கள் முன் பாயலுக்குக் கல்யாணம் ஆச்சாம், அவள் (மாஜி) கணவனோடயே!

Friday, February 13, 2009

குழந்தை குறும்புகள்...

5வயது: “அம்மா, இந்த டைனாசார், பேய்களுக்கெல்லாம் பயப்படாமல் எவ்வளவு தைரியமா இருக்கேன்! இவ்வளவு வளந்த அப்பா இதெல்லாம் கற்பனை பண்ணக் கூட பயந்து அழுது ’வியர்டா’ இருக்காரே!” (குழந்தையோடு நானும் குழந்தை என்று ஆடும் அப்பாவுக்கு இதுவும் வேண்டும்! நிசமாவே, ‘வேண்டும்’னு சொல்ற ஆள்!)

****************************************************

எனக்கும் வேண்டும் வானவில்

உன்னோடு தான் இருந்தேன்.
நீ அணிந்த கொலுசு போல்
நானும்.
நீ தேடி எடுத்த அட்டைப்பெட்டிபோல்
எனக்கும்.
நீ விளையாடப் பிடித்த ஒரு கப் தண்ணீர்
எனக்கும்.

ஆனால், உன் கொலுசில் வரும் இசையோ,
உன் அட்டைப்பெட்டிக்குள் மறைந்திருக்கும்
மந்திர முயலோ,
உன் கப் தண்ணீரில் உனக்கு மட்டும்
தெரியும் வானவில்லோ
ஏன் எனக்குக் கிடைப்பதில்லை?

****************************************************

உங்கள் ஒவ்வொரு மழலைச் சிரிப்பாய், விளையாடும் கற்பனைகளாய், நீங்கள் விரும்பி உண்ணும் தீனியாய்க் கூடவே இருக்கவே விருப்பம்.

****************************************************

2009-இன் அன்பர் தின வாழ்த்துகள். என் அன்பனுக்கும்.

Friday, February 06, 2009

பத்திரமாய் ஞாபகங்கள்

ஞாபகங்களின்
இழைகளில் என் அதிர்ச்சிகளும் பயங்களும்.
காணாமல் அடிக்கப்பட்ட
கனவுகளைக் கட்டிப்போட்டு
கதிர்/நிலா மின்னும் காவிரிவிழிகளில் புதைத்தாயிற்று.
சுழித்துப் போகிற நீரில்
தவித்து இறந்த தோழி/ழனின் கடைசிக்காட்சி
காணாமலே போகத்தான்
நான் ஞாபகங்களைக் கொன்று கொள்கிறேன்.
(ஏனெனில் அந்தத் தோழி/ழனும் நானேதான்).

மறவாது பிள்ளையார் சுழி போடாமல்
எழுதத் தொடங்கினாலும், மறந்து
நினைவுகளைக் கோர்த்து விடுகிறேன்.
புரிந்த கோடுகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன
ஞாபகங்கள்.

அறிந்து கொன்ற அன்றில்களையும்
காற்பெருவிரலால் மடித்த தொட்டாற்சுருங்கிகளையும்,
தீப்பெட்டிகளுக்குள் தட்டான்பூச்சிகளோடு
(வைத்துக்கொள்கிறேன்)
பத்திரமாய், ஞாபகங்களின் இழைகளுக்கப்பால்
வெகு பத்திரமாய்.

Wednesday, February 04, 2009

கொழுப்பு?

குழந்தைகளைப் பள்ளியிலிருந்து கொணர
(ஓர் அமெரிக்க) ஹைவேயில் நான் அவசரத்தில்!
முன்னே டப்பா-காரில் ஒர் இந்திய இளைஞன்
புதிதாய் ஓட்டும் அச்சத்தில் மெதுமெதுமெதுமெதுவாய்....
எட்டிப்பார்த்தால், கோடம்பாக்கம் ஹைரோட்டில்
என் இருசக்கரவண்டியை
இடித்து எக்களித்தவன் நினைவு வர...
அவசரமாய் என் உயருந்தால் இடிப்பதுபோல் போய்
ஓவர்டேக்!

கடைசி இரண்டு வரிகள் மட்டும் "நிஜம்-போல்":-)

உயருந்து = SUV

Sunday, February 01, 2009

ஓட்டு போடுங்க, 49ஓ போடாதீங்க!

இந்தியத் தேர்தல் விதிகளின் படி, “எனக்கு ஓட்டுப் போட விருப்பமில்லை, ஆனால், என் பேரில் கள்ள ஓட்டு விழுவதைத் தடுக்க விரும்புகிறேன்”னு சொல்லறது 49-ஒ (1). இது பத்தி ஞாநி ("ஒரு வேட்பாளரையும் பிடிக்காட்டி 49ஓ போடு, எப்படியும் ஓட்டு போடு" அப்படின்றாரு) புண்ணியத்தில நிறைய பேரு எழுதியிருக்காங்க. இன்றைய தேதியில் 49ஓ படி ஓட்டுப் போடாம நம்ம கடுப்பைக் காட்டிட்டு வர்றதுன்னால யாருக்கு லாபம்? அரசியல்வாதிகளுக்குத் தான்! நீங்க ஞாநியுடைய ஒரிஜினல் வாதம் பாத்தீங்கன்னா, 49ஓ போட்டால், அதே வேட்பாளர்கள் திரும்பி அடுத்த முறை தேர்தல்ல நிக்க மாட்டாங்க (நிறுத்தப்பட மாட்டாங்க?) என்று சொல்றாரு. ஏங்க, கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரெல்லாம் தேர்தல்ல நிக்கறாங்க!!!

49ஓவினால, யாருக்கு ஓட்டுப் போடறோம்/போடலைங்கிற ரகசியம் ஒடைஞ்சுடுது. எனவே, இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டுமுறை நம்முடைய வோட்டு முறையை மாற்றக் கோரியிருக்கிறது. தேர்தல் வோட்டு போடும்போது "மேற்கூறியவர்களுக்கு வோட்டளிக்க
விருப்பமில்லை" ன்னு கூட மக்கள் வோட்டிட வழி செய்யணுமாம். இன்னும் இது சட்டமாகலை.(2). இதுபத்தி எழுதினா, உ.த.பதிவுமாதிரி நீளமாயிடும் (அவர் பதவி காலியாயிட்டிருக்காம்ல!)

குண்டுக்கல் மாவட்டத்தில வோட்டுப்பட்டியில் கதைத்தேர்தல் நடந்ததுன்னு வச்சுக்குவோம்; அ) சாதியான் ஆ) துட்டான் இ) ரெண்டுங்கெட்டான்னு மூணு பேரு போட்டியிடறாங்க. 1000 பேர் வோட்டு போட்டாங்க (மிச்சம் பேர் சினிமாவுக்குப் போனாங்க). 1000 பேர்ல 900 பேர் (அவிங்க 900 பேரும் "வோட்டுப்பட்டி ஞாநி" கல்லூரி முதுகலை மாணவர்கள்), பூத் ஆபிசர் கையைக் காலைப் பிடிச்சி, கடைசியில் மிரட்டி போராடி (3) 49ஓ மூலமா வோட்டு போட விருப்பமில்லைன்னு சொல்லிட்டாங்க. இந்த நூறு பேரு போட்ட வோட்டுல ரெண்டுங்கெட்டான் ஜெயிச்சாரு. ஞாநி சொல்வது என்னா: இவ்வளவு பேரு ஓட்டு போடலைன்னு கட்சிகளுக்கு தெரியுமாம். கறி பிரியாணி செலவு 100 பேருக்குத் தானே?

49ஓவை பெரும்பான்மை (100% என்பது இயலாது!) பயன்படுத்தினால் இன்னும் இன்னும் எலக்‌ஷன் வரும். ஏங்க, ஒவ்வொரு எலக்‌ஷனுக்கும் பொதுசனம் எவ்வளவு செலவழிக்கிறாங்க தெரியுமா? பிப்ரவரி 2004இல் ஜஸ்வந்த் சிங் தேர்தலுக்கு எதிர்பார்த்த செலவு 818கோடி. தேர்தல் நடத்தறது அரசாங்க ஆணையம் - பொது மக்கள் செலவில! தேர்தல் சம்பந்தப்பட்ட (கறி பிரியாணி, இலைக்குக் கீழே பணம்) இன்னும் பலநூறு கோடி. வேட்பாளர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்குது? தேர்தல் போது, எந்தத் தொகுதியில், எந்த வார்டில யாருக்கு (சாதி, கவுரதை எல்லாம் பாத்து) ஓட்டு விழும்னு கட்சி / கூட்டணியில் தீர்மானிச்சிக்கிறாங்க. அப்படி தீர்மானிக்கப்பட்டவர்களின் "ஆதரவாளர்கள்", கடை / தொழிலகங்களிலிருந்தும், பொது மக்களிடமிருந்தும் காசு கலெக்ட் செய்றாங்க. நம்மூர் பணம் கலர் கலரா இருந்தாலும், கருப்பு வெள்ளையாவும் நேரம் இது. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அழுவது பொதுசனம் தான்! எல்லா நாடுகளிலும் தேர்தல் ஊழல்கள், லஞ்சம் எல்லாம் உண்டு. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், தொழிலதிபர்ங்கற ரீதியில் டொனேஷன் கேட்டு ஃபோன்கால் வந்தது, இது சகஜம்!!

உருப்படியா இரண்டு யோசனைகள் (நடைமுறைச் சிக்கல்கள் உண்டு):
1. ஓட்டுப் போடுவது சில நாடுகளில் கட்டாயம் (சுட்டியில இதுக்கான வாத/எதிர்வாதங்கள் இருக்கு). அதுபோல், திண்மையுள்ள இந்தியக் குடிமக்கள் எல்லாரும் வோட்டுப் போடணும்னு ஒரு சட்டம் வேணும். அட்லீஸ்ட், வெளிநாட்டில் இருக்கும் இந்தியக் குடிமக்களுக்கு தபால் ஓட்டுப் போடுவதை வழிமுறைப் படுத்தலாம் இல்லையா? படிச்சவங்க குறைவா ஓட்டுப் போடறாங்களாம் (4). பத்தாவது முடிச்சவங்க ஓட்டுப் போடலைன்னா, ரூ.10,000 வரை தண்டம் கட்டணும்னு வைக்கலாமே, அடுத்த எலக்‌ஷனுக்காவது பணம் சேரும்.

2. நாட்டைத் திருத்த இளைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் குழுவா அமைச்சு தேர்தலுக்கு நிக்கலாம். (அருண்குமார் பதிவில எம்.எஸ். உதயமூர்த்தியின் முயற்சி பற்றி எழுதியிருக்காரு). தேர்தலில் வென்றவர்களுக்கு சட்டத்துக்கு மீறி வருமானம்/இரண்டுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இருந்தால், வென்றவர் பதவி துறக்கணும்னு அந்த குழு கறாரா நடைமுறைப்படுத்தணும்.

ஒவ்வொரு இந்தியத் தேர்தலும்போதும் வந்து 49ஓ போடுன்னு சொல்லாம, இடைப்பட்ட நேரத்துல நல்ல வேட்பாளர்களை உருவாக்கப் பாக்கணும். வேட்பாளர்களுக்கு வோட்டு போட விருப்பமில்லை என்பது, சனநாயக அடிப்படைக்கு எதிராகவா என்றும் ஒரு கேள்வி இருக்கு. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல்ல மக்கள் பங்கேற்கணும் (அய்யோ சிரிக்காதீங்க;-( குறிப்பிட்ட நல்ல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தால், தேர்தலுக்குப் பின்னரே கட்சிக்கு டொனேஷன் தருவோம்னு மக்கள் உறுதி தர்றதுன்னு கூட வழிகள் இருக்கு. ஓ-போடு இயக்கத்தில், படிச்சவங்களை டார்கெட் செய்யறாங்க; படிக்காதவங்க ஓட்டு போடுறது எதுக்குன்னு முதல்ல புரிஞ்சுக்கணும். அட்லீஸ்ட் நம்மூரில் இருக்கிற சட்டங்களை அமல்படுத்துவதிலும் சட்டங்களைப் பற்றின உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலும் தான் நம்மைப் போன்ற படித்த ஞாநிகள் ஒத்துழைக்க வேண்டும்.

தரவு/சுட்டிகள்:
1. இந்தியத்தேர்தல் விதிகள் இங்கே.
2. தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைகள் இங்கே.
3. தேர்தல்களில் 49ஓ போடுவதில் பதிவர்கள் பட்ட நடைமுறைச் சிரமங்கள்: வித்யா, ஊர்சுற்றி, அருண்குமார்.
4. பத்ரி சார் பதிவிலே கிராமத்தை விட பெரிய நகரங்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவுன்னு விழுக்காட்டோட!